கர்நாடகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்
கர்நாடகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனாலும் கடந்த 1-ந் தேதி முதல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் பெங்களூருவில் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலோரத்தில் உள்ள தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, வட கர்நாடகத்தின் உள் மாவட்டங்களான பாகல்கோட்டை, பெலகாவி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, கதக், பல்லாரி, தார்வார், மாவட்டங்கள் மற்றும் தென் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களான பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாசன், குடகு, மண்டியா, ராமநகர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.