பெங்களூருவில் சாரல் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் சாரல் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரு:
சாலைகளில் மழைநீர்
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் நேற்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கருமேகங்கள் ஒன்று கூடி காலை 7 மணியளவில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. நாள் முழுவதும் மழை பெய்வதும், நிற்பதுமாக இருந்தது. சில நேரத்தில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததால், சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த மழை காரணமாக பெங்களூருவில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. கே.ஆர்.சர்க்கிள், கார்ப்பரேஷன் சர்க்கிள், அல்சூர் கேட் போலீஸ் நிலைய சர்க்கிள் உள்பட பல்வேறு சர்க்கிளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு போய் சேர முடியாமல் அவதிப்பட்டனர்.
லேசான மழை பெய்யும்
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலும் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் கர்நாடக பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.
பெங்களூருவை பொறுத்தவரையில் பகலில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும், சில நேரங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெங்களூருவில் வெப்பநிலை அதிகபட்சமாக 73.4 டிகிரியும், குறைந்தபட்சம் 66.2 டிகிரியும் இருக்கும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக பெங்களூரு நகரில் கடுமையான குளிர் காணப்படுகிறது. இதனால் மக்கள் 'ஸ்வெட்டர்', 'ஜர்கின்' போன்ற கவச உடைகளை அணிந்து வெளியில் செல்கிறார்கள்.