காஷ்மீர்: பயங்கரவாதியிடம் இருந்து செண்ட் பாட்டில் வடிவம் கொண்ட வெடிகுண்டு பறிமுதல்


காஷ்மீர்: பயங்கரவாதியிடம் இருந்து செண்ட் பாட்டில்  வடிவம் கொண்ட வெடிகுண்டு பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2023 2:47 PM IST (Updated: 2 Feb 2023 2:57 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து முதன்முறையாக பெர்பியூம் வடிவிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில், ஜம்மு நகரில் நார்வால் பகுதியில் கடந்த 21-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசு பணியில் உள்ள ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆரிப் என்ற அந்த நபர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினராவார். ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் வசித்து வருபவர் என தெரிய வந்து உள்ளது. ரியாசி பகுதியை சேர்ந்த இவரது மாமாவான கமருதீன் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். விசாரணையில் ஆரிப், சாஸ்த்ரி நகர், கத்ரா, நார்வால் பகுதி குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது.

அவரிடம் இருந்து பெர்பியூம் வடிவிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டு (ஐ.இ.டி.) கைப்பற்றப்பட்டு உள்ளது. ஜம்முவில் இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் கூறும்போது, பெர்பியூம் வடிவிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நாங்கள் பறிமுதல் செய்ததில்லை. யாரேனும், இதனை அழுத்த முயன்றாலோ அல்லது திறக்க முயன்றாலோ வெடிகுண்டு வெடித்து விடும்.

இதுவரை வெடிக்க கூடிய பொருட்கள் அடங்கிய ஐ.இ.டி., ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் டைம் பாம்கள் உள்ளிட்ட ஐ.இ.டி.க்களையே கைப்பற்றி இருக்கிறோம்.

ஆனால், முதன்முறையாக பெர்பியூம் பாட்டில் போன்ற உருவத்துடன் இது காணப்படுகிறது. ஆனால், வெடிபொருட்கள் உள்ளே உள்ளன. நாங்கள் இதனை தொட கூட இல்லை.

இதனை எங்களுடைய சிறப்பு படையினர் கையாளுவார்கள் என கூறியுள்ளார். இது எவ்வளவு தீங்கு தர கூடியது மற்றும் சக்தி வாய்ந்தது என கண்டறிவார்கள் என கூறியுள்ளார்.


Next Story