விளையாட்டு மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: டெல்லி அரசு புது உத்தரவு!


விளையாட்டு மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்:  டெல்லி அரசு புது உத்தரவு!
x

டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு.

புதுடெல்லி,

டெல்லியின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கிர்வார், தனது நாயை தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரது வருகையையொட்டி, விளையாட்டு வீரர்கள் இரவு 7 மணிக்குள் தியாகராஜ் ஸ்டேடியத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.


ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தனது நாயை டெல்லி தியாகராஜ் ஸ்டேடியத்திற்கு நடைபயிற்சிக்காக அழைத்துச் சென்றது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், தங்கள் பயிற்சியை முன்கூட்டியே முடிக்க நிர்பந்திக்கப்படுவதாக புகார் அளித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து, டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் தியாகராஜ் ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் பயிற்சியை மேற்கொள்ள வசதியாக, இரவு 10 மணி வரை திறந்திருக்க டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

மறுபுறம், எப்போதாவது மட்டுமே தனது நாயை டெல்லி தியாகராஜ் ஸ்டேடியத்திற்கு நடைபயிற்சிக்காக அழைத்துச் செல்வது வழக்கம். இது தினசரி பழக்கமல்ல. விளையாட்டு வீரர்களை பாதிக்கும் எந்தவொரு செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் என ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் தெரிவித்தார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் இரவு 10 மணி வரை திறந்திருக்க டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமையன்று உத்தரவு பிறப்பித்தார்.


Next Story