கேரளா: பம்பை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் கிறிஸ்தவ மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக செட்டிக்குளங்கரை பகுதியைச் சேர்ந்த எபின் (வயது 24), மெரின் (18), அவரது தம்பி ஷெபின் (15) உள்பட 10 பேர் சென்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அனைவரும் நேற்றுமுன்தினம் ஊருக்கு புறப்பட்டனர். வரும் வழியில் ஆரன்முளா பம்பை ஆற்றில் அனைவரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எபின் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அவரை காப்பாற்றும் முயற்சியில் மெரினும், ஷெபினும் ஈடுபட்டனர். ஆனால் அவர்களையும் தண்ணீர் இழுத்துச் சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மெரின் மற்றும் ஷெபின் ஆகியோரது உடல்களை பிணமாக மீட்டனர்.
தொடர்ந்து தேடியும் எபினின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் எபினின் உடலும் மீட்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பத்தினம்திட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.