கேரளா குண்டுவெடிப்பு: காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 61 வயது பெண் உயிரிழப்பு


கேரளா குண்டுவெடிப்பு: காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 61 வயது பெண் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Nov 2023 8:56 AM IST (Updated: 6 Nov 2023 9:32 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் கடந்த 29-ம் தேதி காலை திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதையும் உலுக்கிய நிலையில், குண்டு வெடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டார்.

இதற்கிடையில், திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் தானாக சரணடைந்தார். மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான்தான் எனக்கூறி அவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது பெண் மோளி ஜொயி என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story