யூடியூப் பார்த்து பள்ளிச்சிறுவன் தயாரித்த ஒயின்; குடித்த நண்பன் மருத்துவமனையில் அனுமதி
யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்து அதை பள்ளிச்சிறுவன் தனது சக நண்பனுக்கு கொடுத்துள்ளான்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வந்துள்ளான். இதனிடையே, அந்த சிறுவன் தனது பெற்றோர் வாங்கிவந்த திராட்சை பழத்தை கொண்டு ஒயின் தயாரிக்க முயற்சித்துள்ளான்.
யூடியூப் பார்த்து திராட்சை பழ சாறு மூலம் ஒயின் தயாரிக்க முற்பட்டுள்ளான். யூடியூபில் கூறுவது போல திராட்சை சாறை சேகரித்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துள்ளான். பின்னர் அந்த பாட்டிலை கடந்த சில நாட்களாக வீட்டிற்கு அருகே மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளான். பின்னர், ஒயின் தயாராகியிருக்கும் என கருத்தி மண்ணில் புதைத்து வைத்த அந்த பாட்டிலை அந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துள்ளான்.
இந்நிலையில், மண்ணில் புதைத்துவைத்த அந்த பாட்டிலை கடந்த வெள்ளிக்கிழமை எடுத்த சிறுவன் அதை பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்றுள்ளான். அங்கு வகுப்பறைக்கு சென்ற அந்த சிறுவன் அங்கிருந்த தனது நண்பனுக்கு தான் யூடியூப் பார்த்து தயாரித்த ஒயினை கொடுத்துள்ளான்.
அதை குடித்த சக மாணவன் சிறிது நேரத்தில் பள்ளியிலேயே வாந்தி எடுத்துள்ளான். அந்த சிறுவனுக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிறுவனை ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனிடம் போலீசார், பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தபோது தனது நண்பன் யூடியூப் பார்த்து வீட்டிலேயே தயாரித்த ஒயின் குடித்ததால் தான் தனக்கு வாந்தி ஏற்பட்டதாக சிறுவன் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் யூடியூப் பார்த்து ஒயின் தயாரித்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். ஆனால், அந்த ஒயினில் ஆல்கஹால் சேர்க்கவில்லை என சிறுவன் தெரிவித்தான். தனது மகன் திராட்சை பழத்தை கொண்டு எதோ தயாரித்து வருகிறான் என்பது தனக்கு முன்கூட்டியே தெரியும் ஆனால் அது ஒயின் என்று தெரியாது என அந்த சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவன் தயாரித்த திராட்சை ரச ஒயினை கைப்பற்றிய போலீசார் அதை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஒயினில் ஆல்கஹால் கலந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவனையும், அவனது பொற்றோரையும் எச்சரித்து அனுப்பினர்.