குடகில் மதம் மாற்ற முயன்ற கேரள தம்பதி கைது: அவசர சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் வழக்கு


குடகில் மதம் மாற்ற முயன்ற கேரள தம்பதி கைது:  அவசர சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் வழக்கு
x

குடகில் கட்டாய மதம் மாற்ற முயன்ற கேரள தம்பதி கைது செய்யப்பட்டனர். கர்நாடகத்தில் மதமாற்ற அவசர சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் வழக்கு இதுவாகும்.

குடகு: குடகில் கட்டாய மதம் மாற்ற முயன்ற கேரள தம்பதி கைது செய்யப்பட்டனர். கர்நாடகத்தில் மதமாற்ற அவசர சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் வழக்கு இதுவாகும்.

குடகில் மதமாற்றம்

கர்நாடகத்தில் மத மாற்றத்தை தடுக்கும் வகையில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதாவை கடந்த ஆண்டு பெலகாவியில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசு தாக்கல் செய்தது. ஆனால் மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய பலம் இல்லாததால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், கர்நாடகத்தில் கட்டாய மத மாற்ற அவசர சட்டம் கொண்டு வர மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 17-ந்தேதி கட்டாய மதமாற்ற அவசர சட்ட வரைவை கர்நாடக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த சட்டத்துக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார். இதனால் கட்டாய மதமாற்ற அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில், ஆசைவார்த்தைகள் கூறியும், வலுக்கட்டாயமாகவும் மதம் மாற்றினால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தம்பதி கைது

இந்த நிலையில் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா மனச்சல்லியில் வறுமையில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து மத மாற்ற முயற்சியில் சிலர் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பஜ்ரங்தள அமைப்பினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பொன்னம்பேட்டை போலீசார் மனச்சல்லி பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்தை ஆசைவார்த்தைகள் கூறி கேரளாவை சேர்ந்த குரியச்சன், அவரது மனைவி சலினாமா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற அவசர சட்டம் அமலுக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.மேலும், மலைவாழ் மக்களை மதமாற்றம் முயற்சிப்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜ்ரங்தள அமைப்பினர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர்.


Next Story