கேரளா: மருமகளின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு மாமனார் தற்கொலை
மருமகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு மாமனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வடக்கேக்கரா பகுதியைச் சேர்ந்தவர் சினோஜ். இவரது மனைவி ஷானு(34). சினோஜின் தந்தை செபாஸ்டியன்(67) இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஷானுவுக்கும், அவரது மாமனார் செபாஸ்டியனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் சினோஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் ஷானு மற்றும் செபாஸ்டியன் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செபாஸ்டியன் கத்தியை எடுத்து ஷானுவின் கழுத்தை அறுத்துள்ளார்.
கழுத்தில் இரத்தம் வழிந்த நிலையில் தெருவுக்கு ஓடி வந்த ஷானு, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதே சமயம் செபாஸ்டியன் தனது அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, செபாஸ்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஷானுவை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.