கேரளாவில் மதுபான விலை உயருகிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு


கேரளாவில் மதுபான விலை உயருகிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2024 5:25 AM GMT (Updated: 5 Feb 2024 7:28 AM GMT)

அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அம்மாநில நிதி மந்திரி கே.என்.பாலகோபால் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் அரசு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளாதான். இந்த நிலையில் 2024-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் இறுதியில் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

இந்தநிலையில், கேரள மாநில சட்டமன்றத்தில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி கே.என்.பாலகோபால் பேசியதாவது:-

கேரளாவின் பொருளாதாரம் சூரியோதயம்போல் பிரகாசமாக மாறி வருகிறது. கேரள மாநில அரசு நிதி வருவாய்க்கான வாய்ப்புகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் இருந்து நிதியுதவி கிடைக்கும் வரை காத்திருக்காமல் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

கேரள மாநிலத்தை உடைந்த பூமி என சித்தரிப்பவர்களை ஏமாற்றி நிறைய சாதனைகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தை யாராலும் உடைக்க முடியாது, மாநில அரசு சோர்ந்தும் போகாது தொடர்ந்து மக்களுக்காக இயங்கி கொண்டு இருக்கும்.

அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டைக் கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கேரளா புறக்கணிப்பதே தென் மாநிலத்தின் நிதிப் பிரச்சினைகளுக்குக் காரணம். 200 கோடி வருவாய் ஈட்ட இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுவகைகள் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுகிறது.

நீதிமன்ற கட்டணம், மின்சார கட்டணம், சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்பவர்கள் ஆகியவற்றிக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story