கேரள தங்க கடத்தல் வழக்கு: சுவப்னா சுரேசுக்கு கொலை மிரட்டல்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
16 மாத சிறைவாசத்துக்குப் பின் சுவப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளும் இடதுசாரி கூட்டணி எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல் ஆகியோருக்கு தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சுவப்னா சுரேஷ் பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்கு முதல்-மந்திரியின் தரப்பில் இருந்து கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய சுவப்னா சுரேஷ், 'இந்த வழக்கு குறித்து முதல்-மந்திரியின் பெயரை தொடர்ந்து குறிப்பிட்டு பேசினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று நேற்று(நேற்று முன்தினம்) காலை முதல் எனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருகின்றன.
முன்பும் எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வரும் என்றாலும், அவை இணைய அழைப்புகளாக இருக்கும். ஆனால் தற்போதைய மிரட்டல்கள் செல்போன் மூலமாக விடுக்கப்படுவதுடன், மிரட்டுவோர் தங்கள் முகவரியுடன் அடையாளத்தையும் வெளியிடுகிறார்கள். அந்த மிரட்டல் பதிவுகளை நான் போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பியுள்ளேன். ' என்றார்.