பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தல்; பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை: பினராய் விஜயன் விளக்கம்


பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தல்; பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை:  பினராய் விஜயன் விளக்கம்
x

பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சமீபத்தில் சுவப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர்,மற்றும் இந்த வழக்கில் முதலமைச்சரின் மனைவி கமலா, மகள் வீணா, முதல்வரின் முன்னாள் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், நளினி நெட்டோ ஆகியோருக்கு தங்கல் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் என்னென்ன செய்துள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுவப்னா சுரேஷ் கூறியதாவது:-

2016ல் முதல்-மந்திரி பினராயி விஜயன் துபாயில் சென்ற போது சிவசங்கர் என்னை முதன்முதலில் தொடர்பு கொண்டார். அப்போது நான் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். முதல்வர் பை ஒன்றை மறந்து விட்டார். அதனை விரைவாக கொண்டு சென்று ஒப்படைக்குமாறும் சிவசங்கர் கேட்டுள்ளார். தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரி மூலம் அந்த பை ஒப்படைக்கப்பட்டது. அதில் பணம் இருந்தது. தூதரகத்தில் உள்ள ஸ்கேனிங் இயந்திரத்தில் பை ஸ்கேன் செய்யப்பட்டது. அது மூலம் அதில் இருந்தது பணம் என்பது தெரிய வந்தது. அதில் இருந்து தான் பல சம்பவங்களும் தொடங்கியது.

சிவசங்கரின் அறிவுறுத்தலின் பேரில் தூதரக அதிகாரியின் வீட்டில் இருந்து பாத்திரங்களில் பிரியாணி உணவுகள் கிளப் ஹவுஸுக்கு பலமுறை ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் பிரியாணி மட்டும் அல்ல மேலும், உலோகப் பொருட்களும் இருந்தன.

எனது வாக்குமூலத்தில் உண்மைக்கு புறம்பான எதுவும் கூறப்படவில்லை. யாரையும் தேவையின்றி இந்த விவகாரத்தில் தொடர்பு படுத்த எனக்கு எந்த திட்டவும் இல்லை. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். அவர்களின் அனைத்து ஈடுபாடு குறித்தும் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். நான் எங்கும் போகவில்லை, எல்லாவற்றையும் ஊடகங்கள் முன் எடுத்து சொல்லுவேன்.

ரகசிய வாக்குமூலம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். இந்த விவகாரம் பற்றிய மீதி உண்மைகளை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள்' என ஸ்வப்னா சுரேஷ் கூறி உள்ளார்.

இந்தநிலையில் நாட்டிலேயே முதன்முறையாக முதல்-மந்திரி ஒருவர் பிரியாணி பாத்திரத்தில் தங்கம் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. பினராய் விஜயன் ராஜினாமா செய்து, நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.

இதுகுறித்து பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது:-

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி தான்.

பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.சில குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது வெறும் வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறும் போது ,

இந்த வழக்கை பல அமைப்புகள் விசாரித்தது. இறுதியில் பாஜகவுக்கும் சிபிஐ(எம்)க்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. விஜயனின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கூட இதில் இடம்பெற்று உள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது, அவர் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கூடி இது குறித்த எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறியதாவது;-

முதல்-மந்திரி பதவியில் தொடரும் தகுதியை பினராய் விஜயன் இழந்து விட்டார். நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். சங்பரிவார் மற்றும் கேரள சிபிஐ(எம்) தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட சமரசம் காரணமாக இந்த வழக்கின் விசாரணை நிறுத்தப்பட்டது என கூறினார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும் போது . எனது கூற்று தற்போது நிரூபணமாகியுள்ளது. சிலைக்கடத்தல் வழக்கில் பினராயிக்கு பங்கு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தேன்.

விஜயனுக்கு எல்லாம் தெரியும், அவர்தான் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி என்று நான் கூறியிருந்தேன். இதை மறைக்க என்ன செய்தாலும் உண்மை வெளிவரும். பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் முறையான விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அது அப்போதே வெளிவந்திருக்கும். அப்போது, ​​பா.ஜ.க.வும், சி.பி.ஐ.(எம்) கட்சியும் கைகோர்த்து இருப்பதாக ஊகங்கள் எழுந்தன.புதிய விசாரணை மூலம் அனைத்தும் வெளிவரும்,'' என சென்னிதலா கூறினார்.


Next Story