கேரள கவர்னரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது..!


கேரள கவர்னரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது..!
x
தினத்தந்தி 15 Oct 2022 10:11 AM GMT (Updated: 15 Oct 2022 10:12 AM GMT)

கேரள கவர்னர் ஆரிப் முகமது கானின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் ஆரிப் முகமது கானின் பேஸ்புக் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேரள ராஜ்பவன் டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான், "எனது முகநூல் பக்கம் இன்று காலை முதல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டு பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த மே மாதத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தன்று "ஒரு பெரிய மரம் விழும் போது, நிலம் சற்று ஆட்டம் காணத்தான் செய்யும்" என்ற ராஜீவ் காந்தியின் கருத்து ஒன்றை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிவிட்டார்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ராஜீவ் காந்தியின் தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தி, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 2,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழும் போது, நிலம் சற்று ஆட்டம் காணத்தான் செய்யும்" என கருத்து தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இது சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் கருத்து என கடும் விமர்சனத்திற்கு ஆளானது. பல ஆண்டுகள் கழித்தும், ராஜீவ் காந்தியின் இந்த கருத்து பழிச்சொல்லாக விடாமல் துரத்துகிறது. இந்த நிலையில், இந்த வாசகங்களை ராஜீவ் நினைவு தின அஞ்சலிக்காக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிவிட்டது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார். இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த டுவீட்டில் உள்ள கருத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை வைத்து எனக்கு எதிராக மோசமான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.


Next Story