தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர் கேரளாவில் சோகம்


தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர் கேரளாவில் சோகம்
x
தினத்தந்தி 10 Feb 2023 5:45 AM IST (Updated: 10 Feb 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் முதியவர் தனக்குத்தானே சிதை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லம்,

கேரளாவின் கொல்லம் மாவட்டத்துக்கு உட்பட்ட மரநாட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 68). முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார், இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது குடும்ப வீடு அமைந்துள்ள புதூர் கிராமத்துக்கு சென்ற விஜயகுமார், அங்கே தனக்குத்தானே சிதை மூட்டி அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அங்குள்ள வீட்டில் வசித்து வந்த விஜயகுமாரின் சகோதரி, இரவில் வீட்டுக்கு அருகே தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அது தானாக பிடித்துக்கொண்ட தீ விபத்து எனக்கருதி அண்டை வீட்டை சேர்ந்த ஒருவருடன் இணைந்து அதை அணைத்தார்.

அங்கே நேற்று காலையில் பார்த்தபோது விஜயகுமார் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை அவர்கள் கண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதமும் சிக்கியது.

முதியவர் ஒருவர் தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story