கேரள அரசுப்பேருந்து 15அடி பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து: ஒருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம்! 50க்கும் மேற்பட்டோர் காயம்!


இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் என்ற இடத்தில் கேரள அரசுப்பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப்பகுதியில் விழுந்தது. மூணாறில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தின் டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

பேருந்து நடத்துனர் கூறுகையில், "விபத்து நடந்தவுடன், அப்பகுதி மக்கள் சிலர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் ஜன்னல் ஷட்டர்கள் தாழ்வாக இருந்ததால் வெளியே உள்ளவற்றை அதிகம் பார்க்க முடியவில்லை. எதிரே வந்த வாகனம் பஸ் மீது மோதியதாக டிரைவர் கூறினார்" என்றார்.

காயமடைந்த அனைவரும் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த நபர் சஞ்சீவன் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story