கேரள தேசியவாத காங்கிரஸ் சரத்பவாருடன் துணை நிற்கும் - மந்திரி ஏ.கே.சசீந்திரன்
கேரள தேசியவாத காங்கிரஸ் சரத்பவாருடன் துணை நிற்கும் என்று அம்மாநில மூத்த தலைவரும், மந்திரியுமான ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜனதா அரசில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்தது மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள பிரிவு சரத் பவாருடன் துணை நிற்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள வனத்துறை மந்திரியுமான ஏ.கே. சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கிறோம். அஜித் பவார் உள்ளிட்டோர் கட்சியை ஏமாற்றினர்.
தேசிய அரசியலை கவனிப்பவர்கள் அஜித் பவாரின் முடிவை நியாயப்படுத்த முடியாது. அவருடைய செயல் அதிகாரத்தின் மீதான பேராசையால் வழிநடத்தப்படுகிறது. கேரளாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடதுசாரி முன்னணியுடன் கூட்டணியை தொடரும்.
பாஜகவுடன் ஒத்துழைக்க தேசியவாத காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது. கட்சியின் அனைத்து மாநில பிரிவுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன" என கூறினார்.