ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
கன்பரா,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து கனடா போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய மாணவர் தாக்கப்பட்டுள்ளார். மேரிலேண்ட் மாகாணம் சிட்னி நகரில் வசித்து வந்த 23 வயதான இந்திய மாணவரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் 4 பேர் இன்று காலை இரும்பு கம்பியால் தாக்கியதுடன் காலிஸ்தான் வாழ்க என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.