கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு


கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு
x

உப்பள்ளியில் கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை கிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்தது.

உப்பள்ளி

உப்பள்ளியில் கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை கிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்தது.

பச்சிளம் குழந்தை கடத்தல்

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா நேருநகரை சேர்ந்தவர் உம்னே சைனாப் ஷேக். இவர் கடந்த 10-ந்தேதி உடல்நலக்குறைவால் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதனால் உம்னே சைனாப், குழந்தையுடன் படுக்கையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி இரவு மர்மநபர்கள், உம்னே சைனாப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையில் புகுந்து அவரது குழந்தையை கடத்தி கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து உம்னே சைனாப், அவரது குடும்பத்தினர் வித்யாநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். மேலும் கிம்ஸ் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

உயிருடன் மீட்பு

இந்த நிலையில் நேற்று காலை கிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் உயிருடன் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. இதைபார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் குழந்தை அருகே சென்று பார்த்தனர். அப்போது அது, கடத்தப்பட்டதாக தேடப்பட்ட உம்னே சைனாப்பின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

ஆனால் குழந்தையை கடத்தியது யார், ஏன் திரும்பவும் குழந்தையை ஆஸ்பத்திரி வளாகத்தில் விட்டு சென்றனர் என்பது தெரியவில்லை. மேலும் பெண் குழந்தை என்பதால் தாயே கடத்தப்பட்டது போல் நாடகமாடினாரா என்பதும் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story