மறைந்த பாடகர் கேகேவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு! ஹைபோக்ஸியா காரணமாக உயிரிழப்பு என தகவல்


மறைந்த பாடகர் கேகேவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு! ஹைபோக்ஸியா காரணமாக உயிரிழப்பு என தகவல்
x

மறைந்த பாடகர் கேகேவின் இதயத்தால் போதுமான அளவு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வெளியேற்ற முடியவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கே.கே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக இறந்தார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்தன, சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிபிஆர் வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறினார்.

இந்நிலையில்,கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேதப் பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.

மருத்துவ அறிக்கையின்படி, இதயம் செயல்பாடு குறைந்ததால்'கடுமையான கார்டியோஜெனிக் நுரையீரல் வீக்கம்' ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட 'ஹைபோக்ஸியாவின்' விளைவுகளைத் தொடர்ந்து மரணம் ஏற்பட்டது.

இதயக் கோளாறு காரணமாக உடலில் போதிய அளவு இரத்தம் பாயாததால், திசுக்களில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததே 'ஹைபோக்ஸியா' ஏற்பட காரணம் என்று சொல்லப்படுகிறது. இதயத்தைச் சுற்றியுள்ள எபிகார்டியல் கொழுப்பால் ஆன திசுக்கள் அதிகரித்தது. இடது பக்க ஆர்டரியின் கீழ் இயல்பற்ற கொழுப்பு படிந்தது.

பலவீனமாக இருந்து வந்த அவரது இதயத்தின் செயல்பாடும் இதற்கு ஒரு காரணம் ஆகும். இதயத்தால் போதுமான அளவு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வெளியேற்ற முடியவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அவர் தனது கை மற்றும் தோள்களில் வலியை அனுபவிப்பதாக தொலைபேசி உரையாடலின் போது தனது மனைவியிடம் கூறியிருக்கிறார்.சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின்படி, கிட்டத்தட்ட மூன்று மணி நேர மேடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே பாடகர் கே.கே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து முழு அறிக்கையும் கிடைத்த பிறகு, காவல் துறையும் இறுதிக் கருத்தை தெரிவிக்கும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story