குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்- கோலார் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்- கோலார் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x

கோலாரில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது இனி குண்டர் சட்டம் பாய்வதுடன், மாநிலத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு நாராயணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோலார்:-

ரவுடிகள் அணிவகுப்பு

கோலாா் மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்திற்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலையொட்டி சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் போலீசார் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி குற்றப்பின்னணி உள்ள பழைய ரவுடிகளை அழைத்து, அணிவகுப்பு நடத்தும் போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கோலார் நகரில் 50-க்கும் மேற்பட்ட பழைய ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த ரவுடிகளை அழைத்து வந்த போலீசார் கோலார் போலீஸ் நிலையத்தில் வைத்து அணிவகுப்பு நடத்தினர் அப்போது போலீஸ் சூப்பிரண்டு நாராயணா ஒவ்வொரு ரவுடிகளின் பெயர், விவரங்கள் மற்றும் அவர்கள் செய்து வரும் தொழில், இதுவரை பதிவான குற்ற வழக்குகள் உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் இனி குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி வாங்கிய போலீசார் அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடிகளுக்கு எச்சரிக்கை

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் சூப்பிரண்டு நாராயணா கூறியதாவது:-

கோலாரில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாக புகார்கள் வருகிறது. இதுவரை சிலரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளோம். இருப்பினும் அவர்கள் தங்கள் நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை. இந்தநிலையில் கோலார் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ரவுடிகள் தங்களை திருத்தி கொள்ளவேண்டும். அவ்வாறு திருந்தாமல், தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவோம் என்று கூறினால், எங்களின் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். இனி யார் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், கோலாரை விட்டு வெளியேற்றிவிடுவோம்.

அதாவது வெளி மாநிலத்திற்கு அனுப்பி வைத்துவிடுவோம். அந்தமாநில போலீசாரின் நடவடிக்கையை ரவுடிகளால் தாங்கி கொள்ள முடியாது. எனவே ரவுடிகள் தங்களை திருத்தி கொண்டு, பொதுமக்களுக்கோ, பொது சொத்துகளுக்கோ எந்த விளைவுகளை ஏற்படுத்தாமல் இருப்பது நல்லது. இது எச்சரிக்கையாக நினைக்க கூடாது. இதை உத்தரவாக கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story