கே.ஆர்.எஸ். அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தது; விவசாயிகள் தொடர் போராட்டம்


கே.ஆர்.எஸ். அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தது; விவசாயிகள் தொடர் போராட்டம்
x

தமிழகத்திற்கு 5-வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி கே.ஆர்.எஸ். அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்தது.

பெங்களூரு:

கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில்தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் 15நாட்களுக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மைஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 30-ந் தேதிநள்ளிரவு முதல் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) மற்றும்மைசூருவில் உள்ள கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுவருகிறது.

நேற்று 5-வது நாளாகவும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி கே.ஆர்.எஸ். அணையில் 24 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் இருந்தது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறைந்து தற்போது 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இன்னும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட்டால் அணையின் நீர் இருப்பு 17 டி.எம்.சி. ஆக குறைந்து விடும் என்றும், அவ்வாறு குறைந்துவிட்டால் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 6,436 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3,917 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 99.56 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

இதுபோல் மைசூருவில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,273.74 அடியாக இருந்தது. இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு நேற்று மொத்தம் வினாடிக்கு 7,436 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்றும் மண்டியாவில் கலெக்டர் அலுவலகம் முன்பும், மலவள்ளி, மத்தூர், பாண்டவபுரா பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் தங்களை கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் பரவாயில்லை, உடனடியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதுபோல் மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கன்னட அமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story