கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 2½ அடி உயர்ந்தது


கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 2½ அடி உயர்ந்தது
x

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 2½ அடி உயர்ந்தது.

பெங்களூரு:-

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், அணைகளுக்கும் கணிசமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

இதேபோல், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

2½ அடி உயர்ந்தது

124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 84.50 அடி தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் 82 அடி தண்ணீர் இருந்தது. இதனால் ஒரே நாளில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 2½ அடி உயர்ந்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 14,556 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 367 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,266 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13,435 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பின்வரும் நாட்களில் அதிக மழை பெய்தால், அணைகளுக்கு வரும் நீரின் அளவும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story