கர்நாடகத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி கிடைக்கும்
கர்நாடகத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் விபத்தில் இறக்க நேரிட்டால் ரூ.1 கோடி உதவித்தொகை கிடைக்கும்.
பெங்களூரு:
ரூ.1 கோடி கிடைக்கும்
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீட்டு வசதியை செய்து கொடுத்துள்ளது. அதன்படி ஊழியர்கள் விபத்தில் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். இந்த நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி. மற்றும் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த போக்குவரத்து கழகத்தின் தலைவர் சந்திரப்பா, அதன் நிர்வாக இயக்குனர் ஆகியோரது முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது.
அந்த ஒப்பந்தத்தின்படி விபத்தில் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்கும். 2 நிறுவனங்களில் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் விபத்தில் இறக்க நேரிடும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.1 கோடி கிடைக்கும். இந்த ஆயுள் காப்பீட்டுக்கு ஊழியர்கள் மாந்தோறும் கட்டணமாக ரூ.885 செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளி
இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு கே.எஸ்.ஆர்.டி.சி. தலைவர் சந்திரப்பா கூறுகையில், "கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த ஆயுள் காப்பீட்டு வசதியை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் பணியில் இருக்கும் விபத்தில் இறந்தாலோ அல்லது பணியில் இல்லாதபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி கிடைக்கும். விபத்தில் ஊழியர்கள் மாற்றுத்திறனாளி நிலையை அடைந்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும்" என்றார்.