கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் சிவமொக்கா-பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கியது


கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் சிவமொக்கா-பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் சிவமொக்கா-பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சிவமொக்கா-

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் சிவமொக்கா-பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மின்சார பஸ் சேவை

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பிலும் மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பெங்களூருவுக்கு பக்கத்தில் உள்ள மைசூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூருவுக்கு முதன்முதலாக கே.எஸ்.ஆர்.டி.சி. மின்சார பஸ் சேவை தொடங்கியது.

பெங்களூரு-சிவமொக்கா

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு மின்சார பஸ் சேவைைய தொடங்க கே.எஸ்.ஆர்.டி.சி. நடவடிக்கை எடுத்து வந்தது. கடந்த வாரம் பெங்களூரு-சிவமொக்கா இடையே மின்சார பஸ்சின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சிவமொக்கா- பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சிவமொக்கா நோக்கி சென்ற மின்சார பஸ்சை அதிகாரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த மின்சார பஸ், ஏ.சி. வசதி கொண்டதாகும். 43 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே விசாலமான இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா, தீ அணைக்கும் கருவி, அவசர கால வெளியேறும் வசதி, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

300 கிலோ மீட்டர்

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. சிவமொக்கா மண்டல மேலாளர் கூறுகையில், சிவமொக்கா- பெங்களூரு இடையே மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த பஸ் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். தற்போது ஒரே ஒரு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதல் பஸ் சேவை தொடங்கப்படும்.

தினமும் மதியம் 12 மணிக்கு சிவமொக்காவில் இருந்து புறப்படும் மின்சார பஸ், மாலை 6 மணிக்கு பெங்களூருவை சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் மின்சார பஸ், மறுநாள் காலை 5 மணிக்கு சிவமொக்காவுக்கு வரும். பெங்களூரு, சிவமொக்கா பஸ் நிலையங்களில் மின்சார பஸ்சுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி உள்ளது என்றார்.


Next Story