கர்நாடகத்திற்கு உ.பி. மாடல் ஆட்சி தேவை இல்லை; குமாரசாமி எதிர்ப்பு


கர்நாடகத்திற்கு உ.பி. மாடல் ஆட்சி தேவை இல்லை; குமாரசாமி எதிர்ப்பு
x

கர்நாடகத்திற்கு உ.பி. மாடல் ஆட்சி தேவை இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்திற்கு உ.பி. மாடல் ஆட்சி தேவை இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடும் எச்சரிக்கை

பிரதமராக இருந்த வாஜ்பாய், ராஜ்ஜிய தர்மத்தை பின்பற்றும்படி முன்பு ஒரு முறை கூறினார். ஆனால் சொந்த மதம் கூறுவதையே பா.ஜனதா பின்பற்றுவது இல்லை. பசவராஜ் பொம்மை கர்நாடகத்திற்கு முதல்-மந்திரி. பா.ஜனதாவுக்கு மட்டும் முதல்-மந்திரி அல்ல. மங்களூருவில் 2 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் பிரவீன் நெட்டார் கொலையான கிராமத்திற்கு மட்டும் பசவராஜ் பொம்மை சென்றுள்ளார்.

இதன் மூலம் அவர் பதவி பிரமாணத்தின்போது ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறிவிட்டார். கொலைக்கு கொலை பதில் அல்ல. முதல்-மந்திரியின் செயல் வன்முறையை தூண்டுவதாக உள்ளது. கொலையான 2 பேரின் வீட்டிற்கும் அவர் சென்று இருக்க வேண்டும். இதன் மூலம் கொலையாளிகளுக்கு கடும் எச்சரிக்கை வெளிப்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு அவர் நடந்து கொள்ளவில்லை.

திறமை இல்லாதவர்கள்

ரத்தத்தில் சாதி-மத குழுக்கள் உள்ளதா?. இது கூட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தெரியவில்லையே. அவர் இருந்தபோதே மங்களூருவில் மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. அப்படி என்றால் ஆட்சி நிர்வாக தோல்விக்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையா?. தோல்விகளை மூடி மறைக்க பசவராஜ் பொம்மை புல்டோசர் நடவடிக்கை குறித்து பேசுகிறார். உத்தரபிரதேசம் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திற்கும் மாதிரி அல்ல. அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாடல் ஆட்சி என்று சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம். அரசியல் சாசனத்தின் மீது மரியாதை இல்லாதவர்கள் புல்டோசர் குறித்து பேசுகிறார்கள். திறமை இல்லாதவர்கள் அக்கம்பக்கத்து மாதிரிகளை தேடுகிறார்கள்.

ஜனதா பரிவார் கொள்கை

ஜனதா பரிவாரை சேர்ந்தவர்கள் தற்போது சங்பரிவாராக மாறி கர்நாடகத்திற்கு உத்தரபிரதேச மாரியை (நோய்) கொண்டு வருகிறார்கள். இது தேவை இல்லை. எம்.என்.ராயின் ஆதரவாளர், ஜனதா பரிவாா் கொள்கையில் ஊறிப்போன எஸ்.ஆர்.பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை தற்போது அரசியல் சாசனத்திற்கு எதிராக புல்டோசர் மாதிரி குறித்து பேசுவது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.


Next Story