குத்தா... 'தத்தா' ஆனார் - நாய் குரைப்பது போல 'மிமிக்கிரி' செய்தவரின் கோரிக்கை நிறைவேறியது...!


குத்தா... தத்தா ஆனார் - நாய் குரைப்பது போல மிமிக்கிரி செய்தவரின் கோரிக்கை நிறைவேறியது...!
x
தினத்தந்தி 21 Nov 2022 11:04 AM GMT (Updated: 21 Nov 2022 11:10 AM GMT)

ரேஷன் அட்டையில் தனது பெயர் குத்தா என்று தவறாக பதிவாகியுள்ளது. குத்தா என்றால் நாய் என்று பொருள்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பங்குரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்தி குமார் தத்தா. இவரின் பெயர் ரேஷன் அட்டையில் தவறாக பதிவாகியுள்ளது.

ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. இந்தி மொழியில் 'குத்தா' என்றால் 'நாய்' என்று பொருள். இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

ரேஷன் அட்டையில் குத்தா என்று தவறாக பதிவாகியுள்ள பெயரை தத்தா என்று மாற்ற அவர் 2 முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால், 2 முறையும் ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்றே மீண்டும் மீண்டும் அச்சிடப்பட்டு வந்துள்ளது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார்.

இதனிடையே, தனது பெயரில் உள்ள 'குத்தா'வை திருத்தி 'தத்தா' என்று மாற்ற வேண்டும் என்று 3-வது முறையாக நேற்று முன் தினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது, அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்தார். அப்போது அவரது காரை இடைமறித்த ஸ்ரீகாந்தி குமார் தத்தா திடீரென 'நாய்' குரைப்பது போல 'மிமிக்கிரி' செய்தார். மேலும், தான் வைத்திருந்த மனுவையும் அவரிடம் வழங்கினார்.

ஸ்ரீகாந்தி குமாரின் வித்தியாசமான அனுகுமுறையால் குழப்பம் அடைந்த அதிகாரி அந்த மனுவை வாங்கி விவரத்தை கேட்டார். அப்போது, தான் ஸ்ரீகாந்தி குமார் தத்தாவின் பெயர் ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்று தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பெயர் மாற்றப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார். இதனால், ஸ்ரீகாந்தி தனது போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில், ஸ்ரீகாந்தி குமார் குத்தா என்று ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்டிருந்த பிழை தற்போது திருத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையில் 'குத்தா' என்று தவறாக இருந்த பதிவு மாற்றப்பட்டு 'தத்தா' என்று திருத்தப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீகாந்தி குமார் தத்தா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
Next Story