இது எங்கள் மேய்ச்சல் நிலம்..! எல்லையில் சீன வீரர்களிடம் தைரியமாக வாதாடிய லடாக் மேய்ப்பர்கள்


இது எங்கள் மேய்ச்சல் நிலம்..! எல்லையில் சீன வீரர்களிடம் தைரியமாக வாதாடிய லடாக் மேய்ப்பர்கள்
x

லடாக் மக்களின் தைரியத்தை பாராட்டி சுசுல் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்சின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்ரீநகர்:

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. லடாக்கில் உள்ள நாடோடி மக்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (LAC) அருகே இந்திய பகுதியில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ல் நடந்த மிகப்பெரிய மோதலுக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக கிழக்கு எல்லைக் கோட்டுக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதை உள்ளூர் மக்கள் நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பர்கள் சிலர் சமீபத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, எதிர் முனையில் இருந்து வந்த சீன வீரர்கள், இங்கு ஆடு மேய்க்கக்கூடாது என தடுத்தனர். ஆனால், ஆடு மேய்ப்பவர்கள் அவர்களுடன் தைரியமாக வாதாடினர். நாங்கள் இந்திய பகுதியில் ஆடுகளை மேய்க்கிறோம், இந்த பகுதி எங்கள் நாடோடி மக்களின் மேய்ச்சல் நிலம் என்று கூறினர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு உருவானது. பின்னர் சீன வீரர்கள் பின்வாங்கி தங்கள் பகுதிக்கு சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

லடாக் மக்களின் தைரியத்தை பாராட்டியும், இந்திய படைகளின் ஆதரவால் மக்கள் இவ்வாறு சீன படைகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் சுசுல் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்சின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மக்களுடனான வலுவான உறவுகளுக்காகவும், எல்லைப் பகுதி மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லடாக் மக்கள் தங்கள் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்டுவதும், சீன வீரர்களிடம் வாதாடி பின்வாங்கச் செய்வதும் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இந்திய மற்றும் சீனப் பகுதிகளைப் பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பான மாறுபட்ட கருத்துகள், இரு தரப்பு படைகளுக்குமிடையே பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளது. சில முறை மோதல்களும் நடந்துள்ளன. ஆனால் இந்த முறை வன்முறை தடுக்கப்பட்டுள்ளது.


Next Story