லகிம்பூர் கேரி சம்பவம்: ஓராண்டு நினைவாக பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முதல் ஆண்டை குறிக்கும் வகையில் பஞ்சாப்பில் விவசாயிகள் 3 மணிநேரம் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமிர்தசரஸ்,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும், மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது.
இந்நிலையில், சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில், அதனை நினைவுகூரும் வகையில் பஞ்சாப்பில் விவசாயிகள் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற பெயரிலான விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே பந்தல் அமைத்தனர். அதன்பின்னர் தரை விரிப்புகளை தண்டவாளத்தில் விரித்து, அதில் அமர்ந்தபடி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் விவசாய சங்கத்தின் கொடிகளை ஏந்தியபடியும் அமைதியான முறையில் அமர்ந்தபடி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 3 மணிநேரம் நீடித்தது.