சிபிஐ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தொண்டர்களை தாக்கிய லாலு பிரசாத் யாதவின் மனைவி!
கட்சி தொண்டர்கள் வழியை மறித்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனால் அதிகாரிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
பாட்னா,
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்திரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி, சிபிஐ சோதனைக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஊழல் வழக்கு தொடர்பாக, லாலுவின் வீடு உட்பட 15 இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசாரணையின் போது லாலு பிரசாத் யாதவ், அவரின் இளைய மகன் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் இல்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக, ரப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர்.
லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ரெயில்வே மந்திரியாக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழல் புகாரில் லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்களை சி.பி.ஐ. இணைத்துள்ளது.
இந்த சோதனைக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தொண்டர்கள் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையின் போது தவறாக நடந்து கொண்டனர் என்றும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் சி.பி.ஐ. ரெய்டு குறித்து குற்றம்சாட்டி உள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டை முடித்துக் கொண்டு வெளியே சென்றதும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் வழியை மறித்து கொண்டு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சோதனை முடிந்து அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியேற வந்தபோது, கட்சி தொண்டர்கள் வழியை மறித்துக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது அங்கு வந்த ரப்ரி தேவி, தொண்டர்களை அடித்து வழிவிட சொன்னார். மேலும் அவர்களை கடுமையாக திட்டி, அதிகாரிகளுக்கு வழி விட கோரினார். அதன்பின் அதிகாரிகள் வீட்டை விட்டு வெளியெறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.