மழை நீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்


மழை நீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
x
தினத்தந்தி 25 July 2023 6:15 AM GMT (Updated: 25 July 2023 6:58 AM GMT)

பைந்தூர் அருகே தரைப்பாலம் ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரு:-

பலத்த மழை

உடுப்பி மாவட்டம் பைந்தூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பைந்தூரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்தநிலையில் பைந்தூர் டவுன் பகுதியில் தகர்சே கிராமத்தில் உள்ள ஒரு தரைப்பாலம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் செலவில் இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த தரைப்பாலம் சிதலமடைந்து காணப்பட்டது.

இதனால் விரைவில் இடிந்துவிழும் என்று கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்தமாதம் தொடக்கத்தில் பெய்த மழையில் தரைப்பாலம் மேலும் சிதிலமடைந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய தரைப்பாலமாக கருதப்பட்டதால் பொதுமக்கள் உடனே இந்த தரைப்பாலத்தை சீரமைத்து கொடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நீரில் அடித்து செல்லப்பட்ட பாலம்

இந்தநிைலயில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் தரைப்பாலம் திடீரென்று நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தகர்சே கிராமத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் கல்தோடுவில் பாலம் ஒன்று மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் பெண்கள் பலர் மழைநீரில் இழுத்து செல்லப்பட்டனர். தற்போது அதேபோல மீண்டும் ஒரு தரைப்பாலம் மழை நீரில் அடித்து சென்றிருப்பது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த தகர்சே கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட நிர்வாகம் உடனே இந்த தரைப்பாலத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய பாலம் அமைத்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகர்சே கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை வாங்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story