கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை அதிக பயணிகளை கையாண்டு மங்களூரு விமான நிலையம் சாதனை


கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை அதிக பயணிகளை கையாண்டு மங்களூரு விமான நிலையம் சாதனை
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் அதிக பயணிகளை கையாண்டு மங்களூரு விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

மங்களூரு-

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் அதிக பயணிகளை கையாண்டு மங்களூரு விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

மங்களூரு விமான நிலையம்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே ஆகிய பகுதிகளுக்கும், துபாய், அபுதாபி, பக்ரைன், தோகா, குவைத், மஸ்கட் ஆகிய பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மங்களூரு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் மங்களூரு வழியாக வெளிநாடு சென்று வருகிறார்கள்.

சாதனை

இந்த நிலையில், மங்களூரு விமான நிலையம் நடப்பு நிதியாண்டான கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடு என அதிக பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

உள்நாடு பயணங்களில் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள் மூலம் 87.50 சதவீத பயணிகளையும், வெளிநாட்டு பயணங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்கள் மூலம் 81.7 சதவீத பயணிகளையும் மங்களூரு விமான நிலையம் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாதங்களில் பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், மும்பை, புனே ஆகிய பகுதிகளில் வந்த விமானங்களில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 739 பயணிகள் (மொத்த இருக்கைகள் 3 லட்சத்து 21 ஆயிரத்து 554) பயணித்துள்ளனர். இது 87.5 சதவீதம் ஆகும்.

உள்நாட்டு பயணம்

அதிகபட்சமாக மும்பையில் இருந்து வந்த விமானங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 973 பயணிகள் (மொத்த இருக்கைகள் 1,23,836) பயணித்துள்ளனர். குறைந்தபட்சமாக புனேயில் இருந்து வந்த விமானங்களில் 11,078 பயணிகள் (மொத்த இருக்கைகள் 16,062) பயணித்துள்ளனர்.

மங்களூருவில் இருந்தும் புறப்படும் உள்நாட்டு விமானங்களில் சென்னை மற்றும் ஐதராபாத் முறையே 89.91 சதவீதம், 89.66 சதவீத பயணிகள் பயணித்துள்ளனர். சென்னைக்கு 11,700 இருக்கைகளில் 10,520 பேர் பயணித்துள்ளனர். ஐதராபாத்துக்கு 23,836 இருக்கைகளில் 21,370 பேர் பயணித்துள்ளனர். இதில் 1,08,695 பயணிகள் (மொத்த இருக்கை 1,23,836) பயணித்து 87.3 சதவீதத்துடன் மும்பை 3-வது இடத்தில் உள்ளது.

வெளிநாட்டு பயணம்

சர்வதேச அளவில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை அபுதாபி, பக்ரைன், தம்மம், தோகா, துபாய், குவைத், மஸ்ட் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த விமானங்களில் 1,10,823 பயணிகள் (மொத்த இருக்கை 1,35,626) பயணித்துள்ளனர். இது 81.7 சதவீதம் ஆகும்.

மங்களூரு விமான நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 1,12,930 பயணிகள் (மொத்த இருக்கை 1,35,449) பயணித்துள்ளனர். இது 83.3 சதவீதம் ஆகும்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 47 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பின்வரும் நாட்களில் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து கூடுதல் உள்நாட்டு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் இன்னும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் மங்களூரு விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story