அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு கேட்டால் 'வாட்ஸ்-அப்' குழு தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை; பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் எச்சரிக்கை


அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு கேட்டால் வாட்ஸ்-அப் குழு தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை; பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு கேட்டால், ‘வாட்ஸ்-அப்’ குழு தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

சமூக வலைத்தளங்களில் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்', 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், அந்தந்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்பு கமிஷனர் (தேர்தல் பிரிவு) உஜ்வல்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உஜ்வல் குமார் பேசியதாவது:-

குழு தலைவர் மீது நடவடிக்கை

சட்டசபை தேர்தலில் சமூக வலைத்தளங்களை பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு அதிகமாக பயன்படுவது வாட்ஸ்-அப் தான். வாட்ஸ்-அப் குழு மூலமாக அதிகமாக பிரசாரம் செய்யப்படுவதுடன், கட்சிகளுக்கு வாக்குகள் கேட்கின்றனர். வேட்பாளர்கள் சார்பில் வாட்ஸ்-அப் குழுவில் பிரசாரம் செய்வது, மக்களிடம் வாக்குகள் கேட்பதற்கு அனுமதி கிடையாது.

அவ்வாறு வாட்ஸ்-அப் குழு மூலமாக வாக்குகள் கேட்டு, அதுபற்றி தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்-அப் குழு அட்மின் (குழு தலைவர்) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனையும் தீவிரமாக கண்காணிக்கப்படும். 'கூகுள்-பே', 'போன்பே' உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலமாக வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story