2024 நாடாளுமன்ற தேர்தலை நிதிஷ் குமார், சோரனுடன் சேர்ந்து சந்திப்போம்; மம்தா பானர்ஜி


2024 நாடாளுமன்ற தேர்தலை நிதிஷ் குமார், சோரனுடன் சேர்ந்து சந்திப்போம்; மம்தா பானர்ஜி
x

நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் மற்றும் பிற தலைவர்களுடன் சேர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி கூறியுள்ளார்.

கொல்கத்தா,



பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்வது என்பது எளிதல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடின உழைப்புடன், போராடியவற்றை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.

அந்த சமயத்தில் இல்லாத மனிதர்களால், அது எவ்வளவு கடினம் வாய்ந்தது என உணர முடியாது என கூறியுள்ளார். ஆனால், இன்று சில ஊடகங்கள் இருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவமதிப்பு செய்வதற்காகவே அவர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

பொய்யான செய்திகள் எப்போதும் வெளிவந்து கொண்டே இருக்க முடியாது. இந்த மனிதரின் வீட்டில் இருந்து இவ்வளவு நகைகள் கண்டறியப்பட்டு உள்ளன என நீங்கள் எல்லோரும் செய்தியை காண்பித்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், அது கோர்ட்டில் இன்னும் நிரூபிக்கப்பட்டு உள்ளதா? நாங்கள் சட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். டி.ஆர்.பி. (தொலைக்காட்சி பார்வையாளர்கள் விகிதம்) எப்போதும் மேலேயே சென்று கொண்டிருக்காது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அவர்கள் ஏதேனும் சில விசயங்களுடன் வருகிறார்கள் என பேசியுள்ளார்.

அக்கட்சியின் பீர்பும் மாவட்ட தலைவராக உள்ள அனுபிரதா மொண்டல், 2010-ம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் இன்று எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுபற்றி பேசிய மம்தா, மொண்டலை சிறையிலேயே வைத்திருக்க முடியும் என்றும் அவரது தொகுதியை கைப்பற்றி விடலாம் என்றும் நீங்கள் நினைத்தால் அது தவறு.

அது ஒருபோதும் நடக்காது என்று பேசியுள்ளார். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் மற்றும் பிற தலைவர்களுடன் சேர்ந்து சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.


Next Story