வளர்க்க முடியாத காரணத்தால் மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள்தண்டனை
வளர்க்க முடியாத காரணத்தால் மகளை கொன்ற தந்தைக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
பெலகாவி: பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா காக்வாட் டவுனை சேர்ந்தவர் பசவராஜா ஈரப்பா மகதும்மா (வயது 35). இவருக்கு 7 வயதில் சங்கீதா என்ற மகள் இருந்தாள். இந்த குழந்தையை வளர்க்கவும், படிக்கவைக்கவும் முடியாமல் கூலி வேலை செய்து வந்த பசவராஜாவால் முடியவில்லை.
இதனால் அவர் கடன் தொல்லையிலும் சிக்கியதாக தெரிகிறது. இதன்காரணமாக விரக்தி அடைந்த அவர் பெற்ற மகள் என்று கூட பாராமல் சங்கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி நடந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காக்வாட் போலீசார் பசவராஜாவை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக சிக்கோடி 7-வது கூடுதல் கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி எஸ்.எல்.சவுகானா, குற்றம்சாட்டப்பட்ட பசவராஜாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.