பாஜக நிர்வாகி, மனைவி கொடூர கொலை - அதிர்ச்சி சம்பவம்


பாஜக நிர்வாகி, மனைவி கொடூர கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

பாஜக நிர்வாகி, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் பிப்லோடா கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ராம்நிவாஸ் குமவாத். இவரது மனைவி முனிபாய். ராம்நிவாஸ், கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவராவார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் வெளியூரில் வசித்துவரும் நிலையில் ராம்நிவாஸ் தன் மனைவியுடன் பிப்லோடா கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ராம்நிவாசும், அவரது மனைவி முனிபாயும் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் அத்துமீறி கும்பல் நுழைந்துள்ளது. அந்த கும்பல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் ராம்நிவாஸ், மனைவி முனிபாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இன்று காலை அறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் கொள்ளை முயற்சியின்போது இந்த இரட்டை கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த இரட்டை கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரித்துவரும் போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story