உள்நாட்டில் உற்பத்தியான ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு


உள்நாட்டில் உற்பத்தியான ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
x

மும்பையில் தயாரான ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.



புனே,


இந்திய கடற்படையில் கல்வாரி வகையை சேர்ந்த ஐ.என்.எஸ். கல்வாரி, ஐ.என்.எஸ். கந்தேரி, ஐ.என்.எஸ். கரஞ்ச் மற்றும் ஐ.என்.எஸ். வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்தியாவை ஒட்டிய கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிதாக ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கியது. இதன்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நேவல் குரூப் என்ற நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் உள்ள மஜகான் கப்பல் கட்டுமான நிறுவனம் (எம்.டி.எல்.) புதிய நீர்மூழ்கி கப்பலை தயாரித்தது.

இதற்கு ஐ.என்.எஸ். வாகீர் என பெயர் சூட்டப்பட்டது. டீசல் மற்றும் மின்சக்தியால் இயங்க கூடிய இந்த வகை கப்பலானது, கடலின் மேற்பரப்பு, கடலின் ஆழத்தில் என எதிரிகளை கண்காணிக்கும் மற்றும் துல்லியமுடன் தாக்கி வீழ்த்தும் திறன் படைத்தது.

இதுதவிர, எதிரி நாட்டின் கடல் சார்ந்த நடவடிக்கைகளை உளவு பார்த்தல், கண்ணிவெடி வைத்தல் மற்றும் கண்காணிப்பு பணிகளையும் திறன்பட மேற்கொள்ளும்.

சோதனை பணிகள் முடிந்த நிலையில், ஐ.என்.எஸ். வாகீர் நீர்மூழ்கி கப்பல் வரும் 23-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இதுபற்றி தளபதி அளவிலான உயரதிகாரி திவாகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.என்.எஸ். வாகீர் கடற்கரை பகுதி மற்றும் நடுக்கடல் என இரு பகுதியிலும் நிறுத்த கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் மற்றும் கடற்படையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராக உள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு மிக பெரிய நடவடிக்கையிது. கல்வாரி வகையை சேர்ந்த 5-வது நீர்மூழ்கி கப்பல், ஐ.என்.எஸ். வாகீர் ஆகும்.

எம்.டி.எல். நிறுவனம் தலைமையில் நடந்த இதன் கட்டுமான பணிகளை இந்திய கடற்படை மேற்பார்வையிட்டது. கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் கடற்படை என இருவரும் இணைந்து, கப்பலின் பரிசோதனைகளை பல முறை நடத்தி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story