45 வருவாய்த்துறை அலுவலகங்களில் லோக் அயுக்தா திடீர் சோதனை
பெங்களூருவில் 28 தொகுதிகளிலும் உள்ள 45 வருவாய்த்துறை அலுவலகங்களிலும் லோக் அயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். வருவாய்த்துறை அதிகாரிகளை, லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது.
பெங்களூரு:-
45 அலுவலகங்களில் திடீர் சோதனை
கர்நாடகத்தில் ஊழல், பிற முறைகேடுகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தி லோக் அயுக்தா போலீசார் அதிர்ச்சி அளிப்பது வழக்கம். இந்த நிலையில், பெங்களூருவில் 28 தொகுதிகளிலும் இருக்கும் வருவாய்த்துறை அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் லோக் அயுக்தா போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து, பெங்களூருவில் 28 தொகுதிகளிலும் உள்ள 45 வருவாய்த்துறை அலுவலகங்களிலும் லோக் அயுக்தா போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் 45 அலுவலகங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம், மகாதேவபுரா, ராஜாஜி
நகர், பேடராயனபுரா, விஜயநகர், பத்மநாபநகர் உள்ளிட்ட 28 தொகுதிகளிலும் இருக்கும் 45 அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்...
குறிப்பாக முறைகேடு சம்பந்தமாக அந்த அலுவலகங்களில் ஆவணங்கள், பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் பொதுமக்கள் கொடுத்துள்ள புகார் மனு, பிற பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுகிறதா? என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்த ஆவணங்களையும் பரிசீலனை செய்தனர்.
பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். பல்வேறு அலுவலகங்களில் இரவு வரை லோக் அயுக்தாவின் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. சில அலுவலகங்களில் இருந்து முறைகேடு சம்பந்தப்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீதிபதி கண்டிப்பு
இந்த நிலையில், ராஜாஜிநகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நேரில் சென்று இந்த சோதனையை மேற்கொண்டு இருந்தார். அப்போது சில ஆவணங்களை கொடுக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டார். அவற்றை வழங்க தாமதம் செய்ததால், அந்த அதிகாரிகளை லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் கடுமையாக கண்டித்தார். குறிப்பாக பொதுமக்கள் அளித்திருக்கும் மனுக்களையும் அவர் பரிசீலனை நடத்தினார்.
அந்த மனு அளித்திருந்த நபரை தொடர்பு கொண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? எனவும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் வருவாய்த்துறை அலுவலகங்களில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது லஞ்சம் வாங்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி பி.எஸ்.பட்டீல் கண்டிப்புடன் கூறினார். பெங்களூருவில் வருவாய்த்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.