உலக அளவில் குறைந்த தேவைகள்: இந்திய வர்த்தகத்தை ஆட்டி பார்க்கிறதா? - ஏற்றுமதியில் நடப்பது என்ன?


உலக அளவில் குறைந்த தேவைகள்: இந்திய வர்த்தகத்தை ஆட்டி பார்க்கிறதா? - ஏற்றுமதியில் நடப்பது என்ன?
x

இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி அளவு, அக்டோபரில் 16.7 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் பொருட்களுக்கான தேவைகள் குறைந்துள்ளதால் இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 2021 அக்டோபரில் 3,573 கோடி டாலராக இருந்து, 2022 அக்டோபரில் 2,978 கோடி டாலராக 16.7 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் முதல் முறையாக பொருட்கள் ஏற்றுமதி அளவு 3,000 கோடி டாலருக்கு கிழே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயத்தில் இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2021 அக்டோபரில் 5,364 கோடி டாலராக இருந்து, 2022 அக்டோபரில் 5,669 கோடி டாலராக 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பொருட்கள் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வேறுபாடான வர்த்தகபற்றாக்குறையின் அளவு அக்டோபரில் 2,691 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

பொருட்கள் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் பொறியியல் பொருட்கள் அக்டோபர் மாதத்தில் 21 சதவீதம் சரிந்து 740 கோடி டாலராக சரிந்துள்ளது. இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் விலைகளை குறைக்க அவற்றின் மீது புதிய ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டதால் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி, நகை, நவரத்தினங்கள் ஏற்றுமதி 2021 அக்டோபரை விட 2022 அக்டோபரில் 21 சதவீதம் சரிந்துள்ளது. பருத்தி நூல், கைத்தறி துணி, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 50 சதவீதம் சரிந்துள்ளது.

அதேசமயத்தில் சாஃப்ட்வேர் உள்ளிட்ட சேவைகள் ஏற்றுமதி 2021 அக்டோபரில் 2,037 கோடி டாலராக இருந்து, 2022 அக்டோபரில் 2,858 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 4 மாதங்களாக பொருட்கள் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வேறுபாடு 2,500 கோடிக்கு அதிகமாக தொடர்வது கவலை அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story