அடித்தது அதிர்ஷ்டம்... வங்கி நோட்டீஸ் வந்த நாளில், லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு
கேரளாவில் வங்கி நோட்டீஸ் வந்த அதே நாளில், மீனவர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு விழுந்த அதிர்ஷ்டம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வருபவர் பூக்குஞ்சு. மீனவரான இவர், வீடு ஒன்றை கட்டுவதற்காக கருணாகபள்ளியில் உள்ள யூனியன் வங்கியில் ரூ.9 லட்சம் வரை கடன் வாங்கி இருக்கிறார்.
ஆனால், அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இறுதியில், வங்கியில் இருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என அவரிடம் கூறப்பட்டு உள்ளது.
அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனால், வீட்டை விற்கவும் அவரால் முடியவில்லை. இந்நிலையில், அன்று மாலை அவரது சகோதரரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய அவரது சகோதரர், ஏ.இசட்.907042 என்ற எண் கொண்ட அட்சயா லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்து உள்ளது என கூறியுள்ளார்.
உடனடியாக ஓடி சென்று தனது லாட்டரி சீட்டை எடுத்து பார்த்த பூக்குஞ்சை பார்த்து அதிர்ஷ்டம் புன்முறுவல் செய்துள்ளது. கடந்த 12-ந்தேதி கேரள அரசு வெளியிட்ட ரூ.70 லட்சம் பரிசு தொகை கொண்ட அட்சயா லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்த சீட்டு அவருக்கு கை மேல் பலன் கொடுத்து உள்ளது. அடுத்த நாள், அவருக்கு சொத்து முடக்கத்திற்கான நோட்டீஸ் அனுப்பிய அதே வங்கிக்கு, தனது பரிசு தொகையை பெறுவதற்காக சென்றுள்ளார். ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்ற அளவுக்கு வளர்ந்துள்ள கடன் தொகையை அடைத்து விட பூக்குஞ்சு முடிவு செய்துள்ளார். சிறிய அளவில் தொழில் தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.