நிலவை நெருங்கும் சந்திரயான்-3: விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைப்பு
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ. 615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 'எல்.வி.எம்.3 எம்4' ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ந்தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவப்பகுதி ஆய்வு பணிக்கான இந்த முயற்சி வெற்றிகரமாக நடந்தது.
இதையடுத்து 'சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்று வட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியது. இதனை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' விண்கலம் 100 கி.மீ. தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரைஇறங்கும் 'விக்ரம் லேண்டரை' தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் நேற்று இறங்கினர். அதன்படி, நிலவை நெருங்கிய நிலையில் 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து அவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது.
திட்டமிட்டபடி 23-ந்தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலத்தை தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி மற்றும் நேற்று விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இன்று இஸ்ரோ வெளியிட்டது.
நிலவு சுற்றுப்பாதையில் குறைந்தபட்சம் 153 கி.மீ., அதிகபட்சம் 163 கி.மீ. என்ற தொலைவில் விக்ரம் லேண்டர் பயணித்து வந்த நிலையில் தற்போது அதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள விக்ரம் லேண்டரின் உயரம் குறைந்தபட்சம் 113 கி.மீ., அதிகபட்சம் 157 கி.மீ., வரை குறைக்கப்பட்டுள்ளது.
லேண்டர் மாடல் இயல்பான நிலையில் பயணித்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, லேண்டரின் உயரத்தை 2-வது முறையாக குறைக்கும் பணி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.