பணிக்கொடை சலுகையை வழங்க கோரி மதிய உணவு திட்ட ஊழியர்கள் காலவரையற்ற தர்ணா
பணிக்கொடை சலுகையை வழங்க வலியுறுத்தி மதிய உணவு திட்ட ஊழியர்கள் பெங்களூருவில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு:
ஊழியர்களுக்கு பணிக்கொடை
கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவு திட்டத்தில் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அரசு சமீபத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதை கண்டித்தும், மதிய உணவு திட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மதிய உணவு திட்ட ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தா்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அந்த ஊழியர்கள் கூறுகையில், 'மதிய உணவு திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதையே நம்பி நாங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களை அரசு பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதை கண்டித்து நாங்கள் தர்ணா போராட்டத்தை இன்று முதல் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தொடங்கியுள்ளோம். எங்களுக்கு பணிக்கொடை சலுகை வழங்கும் முறையை தொடங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையறை இன்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அது மட்டுமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்' என்றனர்.
பேச்சுவார்த்தை
ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வருமா? என்று தெரியவில்லை.