மராட்டியத்தில் இடைத்தேர்தல்: தாக்கரே சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் கடும் போட்டி..!!


மராட்டியத்தில் இடைத்தேர்தல்: தாக்கரே சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் கடும் போட்டி..!!
x

கோப்புப்படம்

மராட்டிய மாநிலத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள அந்தேரி கிழக்கு சட்டசபை தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியது. ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரசுடன் கரம் கோர்த்துக்கொண்டு அங்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் மீண்டும் அரசு அமைத்துள்ளார்.

மராட்டிய மாநிலத்திலும் இதே போன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு சிவசேனா கட்சி பிளவுபட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஆதரவைப் பெற்று பா.ஜ.க.வுடன் கரம் கோர்த்து அங்கு புதிய அரசை அமைத்துள்ளது. முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே பதவி இழந்தார். புதிய முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுள்ளார்.

அந்தேரி கிழக்கு யாருக்கு?

இந்த நிலையில் இவ்விரு மாநிலங்களிலும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளன.

மராட்டிய மாநிலத்தில் அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆதரவுடன் பா.ஜ.க. முர்ஜி படேலை நிறுத்தி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பில் ருதுஜா லட்கே நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மரணம் அடைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேயின் மனைவி ஆவார். பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஓரணியில் திரண்டு வரிந்து கட்டி நிற்கின்றன.

இங்கு இந்தத் தொகுதியில் வெற்றி பெற பா.ஜ.க. போராடுகிறது. அனுதாப அலையையும் வாரிச்சுருட்டி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வெற்றிக்கொடி கட்டுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பா.ஜ.க. வை வெற்றி பெறச்செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்ளது.

பீகாரில் 2 தொகுதிகள்

பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் என 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. மோகாமா தொகுதியில் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தகுதியிழப்பு செய்யப்பட்டதால், இடைத்தேர்தல் நடக்கிறது. கோபால் கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுபாஷ் சிங் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதாதளம் ஆனந்த் சிங்கின் மனைவி நீலம் தேவியை களம் இறக்கி உள்ளது. பா.ஜ.க., உள்ளூர் பிரபலமான லாலன் சிங்கின் மனைவி சோனம் தேவியை நிறுத்தி இருக்கிறது. இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

கோபால் கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. மறைந்த எம்.எல்.ஏ. சுபாஷ் சிங் மனைவி குசும் தேவியை நிறுத்தி உள்ளது. ராஷ்டீரிய ஜனதாதளம் மோகன் குப்தாவை களம் இறக்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி லாலு பிரசாத்தின் நெருங்கிய உறவினரான சாது யாதவின் மனைவி இந்திரா யாதவை போட்டியில் இறக்கி உள்ளது.

இவ்விரு தொகுதிகளில் ஆளும் கூட்டணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பிற மாநிலங்கள்

தெலுங்கானா, உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா என 4 மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளத. அதுபற்றிய ஒரு அலசல் :-

* தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அங்கு முனோகோடே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகோபால் ரெட்டி, பா.ஜ.க.வுக்கு தாவி, பதவி விலகினார். எனவே அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அவர் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி பிரபாகர் ரெட்டியையும், காங்கிரஸ் பலவை சிரவந்தி ரெட்டியையும் நிறுத்தி உள்ளன.

* உத்தரபிரதேச மாநிலத்தில், கோலகோகர்நாத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அரவிந்த் கிரி மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு அரவிந்த் கிரியின் மகன் அமானை பா.ஜ.க. களத்தில் இறக்கி உள்ளது. சமாஜ்வாடி கட்சி வினய் திவாரியை நிறுத்தி உள்ளது. பகுஜன் சமாஜூம், காங்கிரசும் போட்டியிடவில்லை.

* அரியானா மாநிலத்தில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க.வுக்கு தாவி, பதவி விலகினார். இங்கு அவரது மகன் பாவ்யாதான் பா.ஜ.க. வேட்பாளர். அவரை எதிர்த்து காங்கிரஸ் ஜெய் பிரகாசை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் சதேந்தர் சிங்கை களம் இறக்கி இருக்கிறது.

* ஒடிசாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஷ்ணு சேதி மரணம் அடைந்ததால், தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அவரது மகன் சூரிய வன்ஷியை பா.ஜ.க. வேட்பாளர் ஆக்கி உள்ளது. ஆளும் பிஜூஜனதாதளம் அபந்தி தாசையும், காங்கிரஸ் ஹரேகிருஷ்ண சேதியையும் நிறுத்தி உள்ளன. மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.

அக்னி பரீட்சை

மராட்டியம், பீகார், தெலுங்கானா, உத்தரபிரதேசம், அரியானா, ஒடிசா என 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சிகளுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.


Next Story