மராட்டியம்; துணை முதல் மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்


மராட்டியம்; துணை முதல் மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்
x

ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரி ஆக்குமாறு கட்சி தலைமையிடம் நான் தான் கூறினேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமைக்கு எதிராக திரும்பி ஏக்நாத் ஷிண்டே அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தினார். அவர் மகாவிகாஸ் அகாடியில் இருந்து வெளியேறி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அவருக்கு பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் பா.ஜனதா அவருக்கு முதல்-மந்திரி பதவியை கொடுத்தது. இது பா.ஜனதாவின் தலைமை எடுத்த ராஜதந்திர முடிவு என கூறப்பட்டது.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்-மந்திரி பதவியை கொடுக்குமாறு நான் தான் கூறினேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " எங்கள் தலைவர்கள் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா என்னிடம் கேட்டு தான் ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரியாக்க முடிவு செய்தனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என நான் தான் கூறினேன் என்று கூறினால் கூட தவறில்லை. நான் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்பதும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜே.பி. நட்டா என்னை தொடர்பு கொண்டு நான் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வேண்டும் என கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறினார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசினார். எனினும் துணை முதல்-மந்திரியாக நான் மனதளவில் தயாராகவில்லை. ஏக்நாத் ஷிண்டேவுக்கு வெளியில் இருந்து உதவி செய்யவே தயாராக இருந்தேன். எனினும் எனது தலைவர்களின் உத்தரவால் எனது முடிவை மாற்றிக்கொண்டேன். " என்றார்.


Next Story