மும்பை தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்தி சர்ச்சையில் சிக்கிய கவர்னர்


மும்பை தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்தி சர்ச்சையில் சிக்கிய கவர்னர்
x

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் காலணி அணிந்தபடி அஞ்சலி செலுத்திய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

பயங்கரவாதிகளின் கோர தாக்குதல்

மும்பைக்குள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவி சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல், காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட 10 இடங்களில் துப்பாக்கியால் சுட்டும், வெடி குண்டுகளை வீசியும் குரூர தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் டாக்சிகளில் வைத்த குண்டும் 2 இடங்களில் வெடித்தது.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தங்களது கோர முகத்தை காட்டிய இந்த தாக்குதலில் போலீசார், வெளிநாட்டினர் அப்பாவி மக்கள் என 166 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

14-வது ஆண்டு நினைவு தினம்

ஈவு, இரக்கமின்றி அப்பாவி மக்களை கொன்று குவித்த 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்து நேற்று 14 ஆண்டுகள் ஆனது. இதையொட்டி 14-வது ஆண்டு நினைவு தின மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள உயிரிழந்த தியாகிகள் நினைவிடத்தில் நடந்தது.

காலணி அணிந்து மரியாதை செலுத்திய கவர்னர்

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி காலணி அணிந்தபடி மரியாதை செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் டுவிட்டர் பதிவில், "அஞ்சலி செலுத்தும் போது காலணியை கழற்றுவது இந்திய கலாசாரம். கண்டிப்பாக அது மராட்டிய கலாசாரம். கவர்னர் தொடர்ந்து மராட்டியம் மற்றும் அதன் அடையாளம், கலாசாரத்தை அவமதித்து வருகிறார். காலணியை கழற்றிவிட்டு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கவர்னருக்கு நினைவுபடுத்தி இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர் சர்ச்சை

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மும்பை நகரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரினார்.

சமீபத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் அவர் காலணி அணிந்து பயங்கரவாத தாக்குதலில் பலியான தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story