மராட்டியத்தில் ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.513 கோடி நிதி ஒதுக்கீடு!
ரூ.100க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க மாநில அரசு ஆலோசித்து வந்தது.
இதுதொடர்பாக மும்பையில் ஆலோசனை நடத்திய மாநில அமைச்சரவை, ரூ.100க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஒருமனதாக முடிவு செய்தது.
இதில் ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 1.50 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பரிசுத் தொகுப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்க மாநில அரசு ரூ.513 கோடி ஒதுக்கியுள்ளது. அதற்கான அரசாணையை அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல், மும்பை மாநகராட்சி தேர்தல் உள்ளிட்டவை வரிசையாக வரவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே மாநில அரசு குடும்ப அட்டை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.