முலாயம்சிங் யாதவ் தொகுதியில் மருமகள் போட்டி
மறைந்த முலாயம்சிங் யாதவ் எம்.பி.யாக இருந்த தொகுதியின் இடைத்தேர்தலில் அவருடைய மருமகள் சமாஜ்வாடி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் எம்.பி.யாக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 10-ந் தேதி அவர் காலமானார்.
அதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
இந்தநிலையில், மைன்புரி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக முலாயம்சிங் யாதவின் மருமகளும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் 'டுவிட்டர்' பக்கத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிம்பிள் யாதவ், கனோஜ் தொகுதியில் 2 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அங்கு போட்டியிட்டபோது தோல்வி அடைந்தார்.
மைன்புரி தொகுதி சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. 1996-ம் ஆண்டில் இருந்து அங்கு சமாஜ்வாடி வெற்றி பெற்று வருகிறது. முலாயம்சிங் யாதவ் 4 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மொத்தம் 12 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட அத்தொகுதியில், 35 சதவீதம் பேர் யாதவர்கள் ஆவர். அந்த தொகுதியில் அடங்கிய 5 சட்டசபை தொகுதிகளில், 3 தொகுதிகள் சமாஜ்வாடி கட்சி வசமும், 2 தொகுதிகள் பா.ஜனதா வசமும் உள்ளன.
முலாயம்சிங் யாதவின் பேரன் தேஜ்பிரதாப் யாதவ் பெயர் அடிபட்டு வந்த நிலையில், டிம்பிள் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், ''குடும்ப அரசியலை தவிர சமாஜ்வாடி கட்சியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், இந்த தடவை பா.ஜனதாவை மக்கள் தேர்வு செய்வார்கள்'' என்றார்.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அசோக்சிங் கூறுகையில், ''அது முலாயம்சிங் யாதவின் தொகுதி என்பதால், அவர்கள் முடிவை வரவேற்கிறோம். அங்கு போட்டியிடுவது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்றார்.
அதுபோல், பகுஜன் சமாஜ் கட்சியும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.