என் உயிரையும் கொடுக்க தயார்... ஆனால் நாட்டை பிளவுபடுத்த விடமாட்டேன் - மம்தா பானர்ஜி


என் உயிரையும் கொடுக்க தயார்... ஆனால் நாட்டை பிளவுபடுத்த விடமாட்டேன் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 22 April 2023 9:37 AM GMT (Updated: 22 April 2023 9:40 AM GMT)

நாட்டை பிளவுபடுத்த நான் விடமாட்டேன்.... என் உயிரையும் கொடுக்க தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய மதத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை நிகழ்ச்சியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மம்தா பேசுகையில்,

மேற்குவங்காளத்தில் எங்களுக்கு அமைதி வேண்டும். எங்களுக்கு வன்முறை தேவையில்லை... அமைதி வேண்டும். நாட்டில் பிளவு தேவையில்லை. நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு இன்று ரம்ஜான் நாளில் நான் உறுதியாக கூறுகிறேன், என் உயிரையும் கொடுக்க தயார்... ஆனால் நாட்டை பிளவுபடுத்த விடமாட்டேன்.

உங்களிடம் நான் கூறுவது என்னவென்றால் அமைதியாக இருக்கங்கள், யார் பேச்சையும் கேட்காதீர்கள். தேசதுரோக கட்சியுடன் நான் போராடுகிறேன். விசாரணை அமைப்புகளுடனும் நான் போராடுகிறேன். எனக்கு தைரியம் உள்ளதால் நான் அவர்களை எதிர்த்து போராடுகிறேன். நான் மண்டியிட தயாராக இல்லை.

பாஜகவிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் அவர்கள் இஸ்லாமிய மதத்தினர் வாக்குகளை பிரிக்கின்றனர் என்று கூறுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு உள்ளது. யார் வெற்றிபெறுவார் யார் தோல்வியடைவார் என்று பார்ப்போம்.

ஜனநாயகம் சென்றுவிட்டால் அனைத்தும் சென்றுவிடும். இன்று ஜனநாயகம் மாற்றப்படுகிறது, வரலாறும் மாற்றப்படுகிறது. அவர்கள் (பாஜக) தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவந்தனர். நான் அதை செய்யவிடமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன்' என்றார்.


Next Story