மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்து: தலையில் காயம்


மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்து: தலையில் காயம்
x
தினத்தந்தி 24 Jan 2024 4:24 PM IST (Updated: 24 Jan 2024 6:42 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் இருந்து 102 கிமீ தொலைவில் உள்ள புர்பா பர்தமான் என்ற இடத்தில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்றிருந்தார். பர்தவானில் இருந்து கொல்கத்தாவிற்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது கார் விபத்திற்குள்ளானது. மம்தா டிரைவரின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு வாகனம் முன்பு திடீரென மற்றொரு கார் வந்ததால், அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் உடனடியாக பிரேக் போட்டுள்ளார். இதனால் காரின் கண்ணாடியில் மம்தா பானர்ஜியின் தலை மோதியது. இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்படுகிறார் என்றும், மருத்துவர்களால் அவர் பரிசோதிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் புறப்பட முடியாமல் காரில் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார். 4 முதல் 5 பேர், தன்னை காரில் தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.

மம்தா பானர்ஜியை தாக்கிவிட்டதாக வெளியான செய்தி அம்மாநில தேர்தலில் பெரிய அளவில் எதிரொலித்தது. வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக அந்த தேர்தலில் மம்தா பானர்ஜி பெரிய வெற்றியை பதிவு செய்தார். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து, மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்-மந்திரி ஆனார்.


Next Story