கால்நடைக்கு புல் அறுக்க சென்ற பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட 'சைக்கோ' இளைஞன்
கால்நடைக்கு புல் அறுக்க சென்ற 65 வயது பெண்ணை கொன்று அவரின் உடலை சாப்பிட்ட சைக்கோ இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பளி மாவட்டம் செந்த்ரா நகரில் அமைந்துள்ள கிராமம் சாரதானா. இந்த கிராமத்தை சேர்ந்த சாந்தி தேவி (வயது 65) கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ள கால்நடைக்கு புல் அறுக்க அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் சாந்தி தேவியை கடுமையாக தாக்கில் கல்லால் அடித்து கொலை செய்தார். பின்னர், சாந்தி தேவியின் உடலை அந்த சைக்கோ இளைஞர் சாப்பிட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக கால்நடைக்கு புல் அறுத்துவிட்டு வீடு திருப்பிக்கொண்டிருந்த மற்றொரு பெண் உயிரிழந்த பெண்ணின் உடலை இளைஞர் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடி கிராம மக்களை அழைத்து வந்தார்.
உடனடியாக அங்கு விரைந்த கிராமத்தினர் முகம் முழுவதும் ரத்தம் படிந்த நிலையில் இருந்த அந்த இளைஞரை விரட்ட முயற்சித்தனர். ஆனால், அந்த இளைஞரின் செயல்பாடுகளால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அருகில் செல்ல பயப்பட்டனர்.
கிராம மக்கள் சூழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதையடுத்து சுற்றி வளைத்த கிராம மக்கள் அந்த இளைஞரை பிடித்து தாக்கினர். பின்னர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொல்லப்பட்ட சாந்தி தேவியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் அவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தி தேவியை கொலை செய்த இளைஞர் மும்பை சேர்ந்த சுரேந்திர தாகூர் (வயது 24) என்பது தெரியவந்தது. சுரேந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன் தெருநாய் கடித்து ரேபிஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். உரிய சிகிச்சை பெறாததால் ரேபிஸ் வைரஸ் பாதிப்பு உச்சமடைந்துள்ளது. ரேபிஸ் பாதிப்பால் மன ரீதியிலாக பாதிக்கப்பட்டு சைக்கோ நிலைக்கு சென்றதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கு பின் சுரேந்திராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.