டெல்லி கோர்ட்டு துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான நபர் திகார் சிறையில் படுகொலை


டெல்லி கோர்ட்டு துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதான நபர் திகார் சிறையில் படுகொலை
x

Image Courtesy : ANI

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லு தாஜ்பூரியாவை, மற்றொரு கும்பலைச் சேர்ந்த நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி ரோகிணி கோர்ட்டு வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தில்லு தாஜ்பூரியா என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் டெல்லி திகாரில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லு தாஜ்பூரியாவை, மற்றொரு கும்பலைச் சேர்ந்த நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.

ஜிதேந்தர் கோகி என்பவரின் கும்பலைச் சேர்ந்த நபர்களான துண்டா என்ற யோகேஷ் மற்றும் அவரது கூட்டாளி தீபக் தீதர் ஆகியோர் தாஜ்பூரியாவை இரும்புக் கம்பியால் தாக்கியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்த தாஜ்பூரியா டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு சுயநினைவை இழந்த நிலையிலேயே தாஜ்புரியா கொண்டு வரப்பட்டதாகவும், காலை 6.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

சுனில் மான் என்ற தில்லு தாஜ்பூரியா டெல்லியில் ஒரு மோசமான கிரிமினல் கும்பலுக்கு தலைமை தாங்கினார். அதே சமயம் தேடப்படும் குற்றவாளியாக இருந்த ஜிதேந்தர் கோகி தலைமையிலான மற்றொரு கிரிமினல் கும்பலுடன் இவரது கும்பலுக்கு மோதல் போக்கு இருந்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், தில்லு தாஜ்பூரியா சோனிபட் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து 2021 செப்டம்பர் 24 அன்று, டெல்லியின் ரோகினி கோர்ட்டு வளாகத்திற்குள், வழக்கறிஞர்களின் உடையில் வந்த தாஜ்பூரியாவின் கூட்டாளிகள் ஜிதேந்தர் கோகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஜிதேந்தர் கோகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் கோர்ட்டு வளாகத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏற்கனவே மற்றொரு குற்றத்துக்காக சிறையில் இருந்த தாஜ்பூரியா, முக்கிய சதிகாரராக விசாரிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோகி மற்றும் தாஜ்பூரியா குழுக்களுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோதல்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒப்பந்த கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கார் கடத்தல் ஆகிய வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story